×

சென்னையில் நில அதிர்வு ஏற்படவில்லை; மிக குறுகிய இடத்திற்குள் நில அதிர்வு ஏற்படாது.! நில அதிர்வுகளை ஆராயும் தேசிய மையம் விளக்கம்

டெல்லி: சென்னையில் நில அதிர்வு ஏற்படவில்லை. மிக குறுகிய இடத்திற்குள் நில அதிர்வு ஏற்படாது, ஒருவேளை குறுகிய இடத்தில் நில அதிர்வு உணரப்பட்டால் வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம் என நில அதிர்வுகளை ஆராயும் ஒன்றிய அரசின் தேசிய மையம் விளக்கமளித்துள்ளது. சென்னையில் இன்று காலையில் இரண்டு இடங்களில் உருவான நில அதிர்வால் பொதுமக்கள், ஊழியர்கள் பீதியடைந்து சாலைக்கு வந்தனர். துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 47,000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அங்குள்ள ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டு கட்டு போல் சரிந்து தரைமட்டமாகின.

இதனிடையே, துருக்கியை தொடர்ந்து இந்தியாவை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் அண்ணா சாலை ஒயிட்ஸ் ரோடு, அண்ணா நகர் போன்ற இடங்களில்  இன்று காலை 10 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டது. அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்துக்கு பலர் தகவல் தெரிவித்தனர். ஆனால், தேசிய நில நடுக்கவியல் மையத்தின் தரவுகளின்படி சென்னையில் எந்தவித நிலநடுக்கமும் பதிவாகவில்லை என்று அந்த மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக நில அதிர்வுகளை ஆராயும் ஒன்றிய அரசின் தேசிய மையம் விளக்கமளித்துள்ளது. அதாவது; சென்னையில் நில அதிர்வு ஏற்படவில்லை. மிக குறுகிய இடத்திற்குள் நில அதிர்வு ஏற்படாது, ஒருவேளை குறுகிய இடத்தில் நில அதிர்வு உணரப்பட்டால் வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,National Center for Seismic Research Description , No earthquake occurred in Chennai; Earthquakes do not occur within a very short space. National Center for Seismic Research Description
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...